Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, July 9, 2012

அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை.......விக்கி

உலகத்தமிழர் பதிவு--விக்கி

ஐந்து வருடங்களுக்கு முன் பொறியியற் கல்லூரிகள் அது அமைந்திருந்த மாவட்டத்தில் இருந்த அல்லது அதன் அருகில் இருந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த வேளையில் 2005ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை சீராக்குகிறோம் என்று அறை கூவல் விடுத்தும் மற்ற பல்கலைக்கழகங்களோடு சண்டையிட்டும் அனைத்துக் கல்லூரிகளையும் தன் வசம் ஆக்கிக் கொண்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.

அப்போது தமிழ் நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் தன் வசம் ஆக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பதே உண்மை. மிகுந்த எதிர்ப்பார்ப்போடு 2005ல் நிறைய புதுக் கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்துக் கல்லூரிகளையும் இணைக்கப்பட்ட புதிதில் அதாவது 2005ல் எதிர்ப்பார்க்கப்பட்ட தரம் இல்லாவிட்டாலும் ஓரளவு சொல்லிக் கொள்ளக்கூடிய தரத்தோடு விளங்கியது. இது 2005ல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படித்த மாணவர்களிடம் கேட்டால் தெரியும். தரம் என்று நான் குறிப்பிடுவது கேள்வித்தாள் கேட்கும் முறை, விடைத்தாள் திருத்தும் முறை, தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளிவிடுவது. இதில் நான் பாடத்தை நடத்தும் முறையைக் கூறாதது ஏனெனில் மேற்கூறப்பட்ட அனைத்தும் தரத்தோடு இருந்து விட்டால் பாடத்தை நடத்தும் முறை தரத்தோடு இருந்தே ஆக வேண்டும். வருடங்கள் ஆக ஆக பல்கலைக்கழகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே வந்தது. இடையில் அரசியல் பிரமுகர்கள் பினாமி பெயரில் பலக் கல்லூரிகளை முளைக்கச் செய்தனர். ஓரளவு தரத்தோடு இருந்த காரணத்தினால் அதிகமான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர். அளவுக்கு அதிகமான கல்லூரிகளும் அதிகளவிலான தோல்வி அடைந்த மாணவர்களின் பதிவையும் சரிவர மேலாண் செய்யத் தெரியாத காரணத்தினால் கேள்வித்தாள் கேட்கும் முறை மற்றும் விடைத்தாள் திருத்தும் முறையில் இருந்த தரத்தை சிறிது தளர்த்தியது. இந்த தளர்த்தலினால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது என்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் தேர்வில் தேறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க தரத்தை தளர்த்துவது முட்டாள்தனமாக இல்லையா?

தொழில்நுட்பத்தின் உச்சியில் இருக்கும் யுகத்தில் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும் பல்கலைக்கழகமே இப்படி செய்யலாமா?

பின்பு மீண்டும் புதிதாக துவக்கப்பட்ட கல்லூரிகளாலும் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையாலும் தனது தரத்தை மேலும் தளர்த்தியது இப்பல்கலைக்கழகம். ஒரு சமயத்தில் 75% முதல் மதிப்பெண்ணாக அறிவித்த இப்பல்கலைக்கழகம் இன்று 85% என்பது சராசரி மதிப்பெண். ஒரு காலத்தில், அதாவது 2005 2006ல், 80% என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இதே பல்கலைக்கழகத்தில் இன்று 95% பெறுவது என்பது ஒன்றும் கடினமல்ல. அப்போது தான் ஒரு முக்கியமான விஷயம் எனக்கு புலப்பட்டது. வெறும் மூன்று மணி நேரத்தேர்வில் ஒருவனின் அறிவை சோதித்து விட முடியாது என்பதே அது.

95% பெற்ற அனைவரும் அறிவாளிகளும் அல்ல!!!
75% பெற்ற அனைவரும் முட்டாள்களும் அல்ல!!!

உலகத்தரம் உலகத்தரம் என்று அனைவரும் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப நூற்றாண்டில் இந்தியத் தரத்தைக் கூட இப்பல்கலைக்கழகம் அடையாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

நிலைமை இவ்வாறிருக்க, இப்பல்கலைக்கழகமோ மீண்டும் தமிழ்நாட்டின் பழைய நிலைமைக்கே கொண்டு செல்வதாக அறிவித்தது. அதன் பலன் தான்
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி
அண்ணா பல்கலைக்கழகம் - கோவை
அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி
இன்னும் பல வருங்காலத்தில் வரும்.

இப்படி மண்டலம் வாரியாக பிரிப்பதற்காகவா மற்ற பல்கலைக்கழகங்களோடு சண்டையிட்டு அனைத்துக் கல்லூரிகளையும் 2005ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்துக் கொண்டது(Divide and Conquer wins here).

அடுத்தது இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கை முரையிலும் தரத்தைத் தளர்த்திய போது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டை நோக்கி கவனித்தது. நான் சொல்வது நுழைவுத்தேர்வைப் பற்றித் தான். 2007 வரை இருந்த நுழைவுத்தேர்வு அதன் பிறகு இல்லை என அறிவித்தது தமிழக அரசு. இதையே இந்த அரசின் சாதனை என்றும் கூறப்பட்டது. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அப்படியெனில் கிராமங்களில் கல்வி நிலையில் தொய்வு இருப்பதை அரசே ஏற்றுக் கொள்கிறது. நிலைமை இப்படியிருந்தால் கிராம மாணவர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள முயற்சி எடுக்கச் செய்வதா அல்லது நுழைவுத் தேர்வை ரத்து செய்வது என்பது சரியான முறையா? நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலம் அவ்விருவருக்கும் இடையே இருக்கும் அறிவு இடைவெளி நீங்கி விடுமா?

அண்ணா பல்கலைக்கழகம் ஓரளவு தரத்தோடு விளங்கிய காலத்தில், 2005 2006 2007ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பல்கலையோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தத்தம் நிறுவனத்திற்கு மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்வு செய்து சேர்க்கை ஆணையையும் வழங்கியது அனைவரும் அறிந்ததே. இன்று அந்த நிலைமை மாறியிருப்பது (2008, 2009ல் வெளிவந்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது) வெறும் பொருளாதார மந்த்/தொய்வு நிலையால் என்று மட்டும் கூறி நம் முகத்தில் நாமே சாயம் பூசிக் கொண்டிருக்காமல் இதற்கு ஒரு பகுத்தறிவு மிகுந்த தொலைநோக்கு சிந்தனை தேவை.

வெறும் பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கும் கல்லூரியாக இல்லாமல் சுய தொழில் தொடங்க பயிற்சி மற்றும் தைரியம் அளிக்கும் பல்கலைக்கழகமாக இது மாற வேண்டும் என்பதே பலருடைய ஆசை. அப்போது தான் எத்தகைய பொருளாதார நிலையிலும் மற்ற நாடுகளோடு நாம் போட்டிப் போட முடியும்.

மொத்த உலகப் பொறியாளர்களில் 35% அதிகமாக உள்ள இந்தியப் பொறியாளர்கள் அமெரிக்கா செல்வதை தம் கனவாக வைத்திருக்கின்றனர். இதை மாற்றி மற்ற நாட்டுப் பொறியாளர்களை இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என விரும்பும் நிலை வர வேண்டும். இதனால் இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்தாலும் பரவாயில்லை. இந்த நிலை என்று வருகிறதோ அன்று தான் கல்வியில் உலகத்தரம்/வல்லரசு அடைந்து விட்டோம் என்று நாம் கூற முடியும். அப்போது அப்துல் கலாமின் கனவும் நனவாகி விடும். இக்கட்டுரை சாதனை நாயகன், அணு விஞ்ஞானி, எம் தலைவன் அப்துல் கலாமுக்கு சமர்ப்பணம்.

கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு இருந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா சரியா ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா
முறையா ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா?
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே!!!


முதலில் அரசு இந்த செய்தியை அலசுமா ......விக்னேஷ் ,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.