Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, July 16, 2012

அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து போர் குற்றம் புரிந்த கொலைகாரர்களை தண்டிக்க வேண்டியது இந்தியாவின் கடமை.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் எந்த பக்கம் போறதுன்னு முடிவெடுக்க வேண்டிய தருணம் வரும் -- இது நண்பன் பட வசனம்.    இது நண்பர்களுக்கு மட்டும் இல்லை,  நாடுகளுக்கும் உண்டு.  

இப்போது இந்தியாவிற்கு. 

சமீபத்தில் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம்  ஜெனிவாவில் நடைபெற்றது.  இக் கூட்டடத்தில்  இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை கண்டித்தும்,  விசாரணை நடத்துவதற்கும் அமெரிக்க ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

பல நாடுகளும் பரபரப்பாக இதை பற்றி பேச ஆரம்பித்து விட்டது.  சிலருக்கு மனதில் சந்தேகம் வரும். 

தனக்கு பிடிக்கவில்லை என்றாலே,  எதாவது நொண்டி காரணத்தை சொல்லி விட்டு குண்டு போடும் அமெரிக்காவிற்கு,  மனித உரிமைகள் பற்றி பேச தகுதி உண்டா என்பதுதான் அது. 

அமெரிக்கா நடத்தியது  எல்லாமே நேரடி யுத்தங்கள்.  அப்படியே மீறி இருந்தாலும் அதை பற்றி பேச இது தருணம் அல்ல.

ஆனால் மதிப்போடும், மரியாதையோடும், சுய கவுரவத்தோடும், பாதுகாப்பு உணர்வோடும் பாதுகாத்திருக்க வேண்டிய தன் நாட்டு மக்களையே கொன்று குவித்து,  சொத்துக்களை சூறையாடி,  அப்பாவி பெண்களை கற்பழித்து,  குழந்தைகளை கூட இறக்கம் இல்லாமல் கொன்று,  மருத்துவமனைகள் மீதும் கூட குண்டு வீசி, கோர தாண்டவம் ஆடி முடித்திருக்கிறது இலங்கை.

அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக மடிந்த போது,  தட்டி கேட்க வேண்டிய இந்தியா,  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்பதுதான் வேதனை.

இலங்கை தமிழர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை.  இந்தியாவோடும்,  தமிழர்களோடும் தொப்புள் கொடி உறவாக இருப்பவர்கள்.  வெறும் 50 மைல் தொலைவில் நம் சொந்தங்கள் அழுது துடித்த போது,  இந்தியா காதை மட்டும் அல்ல ... கண்ணையும் சேர்த்து முடிக்கொண்டது.

இது அடுத்த நாட்டு விஷயமாம்.

இந்தியாவின் வெளிஉறவு கொள்கை என்பது விநோதமானது.  எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் இந்த கைபிள்ளை என்ற கதைதான்.  இல்லாவிட்டால் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுடும் போது வேடிக்கை பார்த்து கொண்டிருக்குமா இந்தியா.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் ,  கடுமையானது, கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம், பொறுத்து கொள்ள முடியாது, சகித்து கொள்ள முடியாது என்று அறிக்கை வீட்டு விட்டு அமைதியாகி விடுவதுதான் இந்தியாவின் வெளிஉறவு கொள்கை.

இந்தியா அயல் நாட்டு விவகாரத்தில் தலை இட்டதே இல்லையா.

இந்திராகாந்தி  அம்மையார் பாக்கிஸ்தான் விஷயத்தில்  தலை இட்டு தான் பங்களாதேஷ் உருவானது.

ஏன்?  அங்கு வாழ்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா.  நம் சொந்தங்களோ.  இலங்கையில் இருப்பவர்கள் நம் சொந்தம் இல்லையா....ரத்தம் இல்லையா .... தொப்புள் கொடி உறவு இல்லையா...

இலங்கையில்  தமிழர்கள் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று இருப்பது வளரும் வல்லரசுக்கு நல்லதல்ல.

இந்தியா நினைத்திருந்தால் ஒரு வார்த்தையில் போர் நின்றிருக்கும். இலங்கை சமாதானத்திருக்கு வந்திருக்கும். அப்பாவி  தமிழர்கள் கொல்லபட்டிருக்க மாட்டார்கள்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாய்,  யாரும் கேட்க ஆள் இல்லாத அனாதையாய்  அலையவேண்டி வந்திருக்காது.

இந்தியாவின் மவுனத்திருக்கும்,  பாராமுகத்திற்கும் காரணம் உண்டு. 

ராஜீவ்காந்தி படுகொலை.

நான் இந்தியன்.  இந்தியனான என்னால் இந்த படுகொலையை ஏற்று கொள்ள முடியாது.  தொலை நோக்கு பார்வை கொண்ட ராஜிவ்காந்தியை இந்தியா இழந்ததால் 20 வருடங்கள் பின் நோக்கி தலைப்பட்டது இந்தியா.

என் வீட்டிற்குள் நுழைந்து, என் வீட்டில் உள்ளவர்களை அடித்தால் எந்த கொம்பனாக இருந்தாலும் வேடிக்கை பார்க்க மனம் வராது.

இது தவறுதான்.  நடந்துவிட்ட ஒரு சம்பவம்.  இதையே ஒரு காரணமாக வைத்து கொண்டு அப்பாவி தமிழர்களை தவிக்க விடுவது என்ன நியாயம்.

நான் விடுதலை புலிகளை ஆதரிக்கவில்லை.  அவர்கள் செய்த எல்லாமே நியாயம் என்று நான் சொல்ல மாட்டேன்.

இன்று கேட்க நாதி இல்லாமல் ஈழ தமிழர்கள் தவிக்க காரணமே அவர்கள்தான். 

எந்த நோக்கத்திற்காக களத்தில் நின்றார்களோ, அந்த நோக்கத்திற்காக களத்தில் நின்ற  சக சகோதர அமைப்புகளை ஒடுக்கினார்கள்.

 ஒழித்து கட்டினார்கள்.  அமைதிதலைவர் அமிர்தலிங்கத்தை அழித்தார்கள்.

 தங்களை தவிர வேறு யாரும் இல்லை இல்லை என்ற நிலை வந்தபோது,  யார் இல்லாமல் தனி நாடு வரமுடியாதோ, யார் இல்லாமல் அங்கே அமைதி நிலவாதோ,  அங்கேயே கை வைத்தார்கள்.

ராஜீவ் படுகொலை. 

இதற்கு ஆயிரம்  காரணம் சொல்லலாம்.  இந்த படுகொலையை நியாய படுத்தினால்,  இந்தியாவின் இந்த நிலையும் நியாயம் என்பதுதான் உண்மை. ஆனால் விவாதம் செய்ய இதுவல்ல நேரம்.

வன்னியில் 40000 தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷ்சே மற்றும் அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷேவும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  அதற்கு இந்தியா என்ன செய்ய போகிறது என்பது தான் கேள்வி.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டு என்றார் இயேசு நாதர்.  ஆனால் மறுகன்னத்தில் அறைந்தால் ஏசுவுக்கும் கோவம் வரும்.

ஆனால் இன்னும் ஒரு படி மேலே போய் முதுகை திருப்பி காட்டும் இந்தியா இந்த விஷயத்தில் வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லதல்ல. 

இலங்கையில்..............பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு,  சீனாவின் நேரடி தொடர்பு,  கால் பதிக்க துடிக்கும் அமெரிக்கா  என்று பல்வேறு கணக்குகளை போட்டு பார்த்து,  தமிழர்கள் விஷயத்தில் தவறான முடிவை இந்தியா எடுத்தால்,  உலக அளவில் இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும்.

இன்று ஐநா சபையாக இருந்தால் என்ன,  மனித  உரிமைகள் சபையாக இருந்தால் என்ன...முதல் முழக்கம் இட்டுருக்க இந்தியா,  இப்போதாவது விழித்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து போர் குற்றம் புரிந்த கொலைகாரர்களை  தண்டிக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

அங்கே வாழும் தமிழர்கள் கவுரவத்தோடு வாழ,  ஒரு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. 

இது மனிதாபிமான அடிப்படையில் மட்டும் அல்ல,  நம் ரத்தங்கள் சுயமாய் வாழவும்,  சூறையாடிய கயவர்கள் தண்டனை பெறவும் தான். 

வரலாற்று தவறை இந்தியா செய்ய கூடாது...... செய்யவே கூடாது...விக்கி 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.