Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, February 1, 2012

இன்ஜினியரிங் என்றால் என்ன ,,,,,,,இன்றைய கல்வி முறை எதனைக் கற்றுக் கொடுக்கின்றன,,,,,,, உங்கள் விக்னேஷ் ,,,,,,?,

"சென்ற ஆண்டு, சென்னையில் மட்டும், 24 ஆன்-லைன் வழிக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில், ஈடுபட்டவர்களில், பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், பொறியியல் படித்தவர்கள். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை காரணமாக, இவர்கள், இக்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது' என்று ஒரு செய்தி கூறுகிறது.

இந்த செய்தியைப் படிப்பவர்கள் அனைவரின் மனதிலுமே எழக் கூடிய கேள்வி, "இன்ஜினியரிங் கல்லூரிகளில் என்னத்தய்யா சொல்லித்தராங்க...?' என்பதுதான்! கல்விக் கூடங்களில், திருடவா கற்றுத் தருகின்றனர்? இல்லையே... பின், தவறு எங்கே என்று சிந்தித்தால், தவறு கல்லூரிகளில் அல்ல; இன்றைய கல்வி முறையில்தான் என்ற உண்மை புலப்படும்.நாம் சிறந்து விளங்கிட, கற்ற கல்வி நமக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால், இன்றையக் கல்வி, மாணவர்களுக்கு எதைக் கற்றுத் தருகிறது? அறத்தையா, ஒழுக்கத்தையா, பண்பையா அல்லது அறிவையா என்றால், இவை எதையுமே கற்றுத் தரவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இன்றைய கல்வி, மாணவர்களை மனிதனாக மாற்றுவதுமில்லை; அறிவாளியாக ஆக்குவதுமில்லை.


மாணவர்களை மனனம் செய்ய வைத்து, மதிப்பெண் பெற வைப்பதே இன்றைய கல்வி; பணத்தை மட்டுமே மாணவர்கள் மனதில் விதைத்து, கல்வி என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு கருவியாகவே காட்டப்படுகிறது. விளைவு... "ஏ.டி.எம்., மிஷனையே லபக்கிய பட்டதாரி வாலிபர் கைது, தொழிலதிபர் மகன் கடத்தல் வழக்கில் இன்ஜினியர்கள் கைது' போன்ற செய்திகள்.

இப்படி, வயிற்றைக் கழுவவும், பணம் சம்பாதிக்கவும் பயன்படும் கல்வி, அவன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழவும், வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணவுமாவது உதவுகிறதா என்றால் அதுவுமில்லை.
அதனால் தானே, சக மாணவியின் பணத்தை கண்டுபிடிக்க, ஆசிரியைகள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததால், அவமானமடைந்த கல்லூரி மாணவி தற்கொலை; பஸ் பாஸ் இல்லாமல் பயணம் செய்ததால், செக்கிங் திட்டியதில் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை போன்ற சம்பவங்கள், ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை; கல்வித்துறைக்கும் கவலையில்லை; பெற்றோரும், தங்கள் பிள்ளைகள், கேம்பசில் செலக்ட் ஆவது பற்றியே சிந்திக்கின்றனர், அவன் எல்.கே.ஜி., படிக்கும் போதிருந்தே!

ஆக, அறம், ஒழுக்கம், தன்னம்பிக்கை, மனதைரியம், பண்புகள் சார்ந்த நல்லறிவைப் பற்றிச் சிந்திக்கவோ, அவர்களுக்குச் சொல்லித் தரவோ கல்விக் கூடங்களுக்கும் நேரமில்லை; பெற்றோருக்கும் நேரமில்லை. குடும்பத்திற்காக சம்பாதிக்க வேண்டிய பெற்றோர், குடும்பத்தை விட்டுவிட்டு, லட்சத்தை கோடியாக்குவதிலும், கோடியை, பல கோடிகளாக்குவதிலுமே பெரும் பொழுதைக் கழிக்கின்றனர். இதற்கிடையில், தங்கள் பிள்ளை கேடியாகிக் கொண்டிருக்கிறானா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை.

அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டியவர்கள், "டிவி' மொபைல் போன், கம்ப்யூட்டர் கொடுத்து, தங்கள் அன்பிற்கு ஈடுசெய்ய விழைகின்றனர். அதுவும், ஒரு குழந்தை மட்டுமே இருந்தால் கேட்கவே வேண்டாம்! அந்தோ பரிதாபம்... இக்காலக் குழந்தைகள்; மகிழ்ச்சியோ, அழுகையோ, வேதனையோ, சாதனையோ எல்லாமே இவற்றோடுதான்.
கார்ட்டூனில் வரும் கதாபாத்திரங்கள் பெயரை பட்டெனச் சொல்லும் குழந்தைகளுக்கு, பெற்றோர் பற்றிய தகவல்களை சொல்ல அவகாசம் தேவைப்படுகிறது சற்று நேரம் சிந்திப்பதற்கு.

இன்னும் சிலர், நாம் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகளும் படக் கூடாதென்று, வீட்டிலிருக்கும் கஷ்ட நஷ்டங்களை குழந்தைகள் அறியவிடாமல், வீட்டு சூழ்நிலைகளை மறைத்து, தம் சக்திக்கும் மீறி, பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து, பிள்ளைகள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடுகின்றனர்.இப்படி எந்தவிதமான எதிர்ப்போ, கஷ்டமோ இன்றி, தாம் விரும்பும் அனைத்தையுமே, உடனுக்குடன் சுலபமாக பெற்று வளரும் குழந்தைகளால், பின்
நாளில், தங்கள் வாழ்வில் வரும் சின்ன சின்ன தோல்விகள், ஏமாற்றங்களைக் கூடத் தாங்க முடிவதில்லை. இதனால், ஏதாவது தோல்வி என்றால், உடனே தன்னை அழித்துக் கொள்கின்றனர்; இல்லையென்றால், தனக்குப் பிடிக்காதவர்களை அழிக்க நினைக்கின்றனர்.

இதன் பாதிப்புதானே, செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த இன்ஜினியரிங் மாணவி தற்கொலை, காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற செய்திகள்!
அடுத்து, கல்வியறிவு பெறுவதால் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை என்ன, கல்வியறிவு பெறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை, மாணவர்களுக்கு கூறுவதை விட்டு, படிப்பு இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்ற ரீதியில்தான், ஆசிரியர்களும், பெற்றோரும் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தானே, மதிப்பெண் குறைந்த கமலாவும், விமலாவும் தற்கொலை செய்து கொள்கின்றனர். நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்றால் மட்டும் தான் இவ்வுலகில் வாழ முடியுமா? இல்லை. படித்தால் மட்டும் தான் பணக்காரனாக முடியுமா? இல்லையே...

"மாணவர்களே புத்தகங்களை கிழிக்காதீர்கள் என்பது போய் - புத்தகங்களே மாணவர்களை கிழிக்காதீர்கள்' எனப் பாடினான் புதுக்கவிஞன். இப்படி, மாணவர்களை சிற்பமாக செதுக்க வேண்டிய கல்வியே, அவர்கள் தடம் புரளவும் வழிகோலாக உள்ளது.
இதைக் கல்வித்துறை கண்டும் காணாமல் இருப்பது முறைதானா? மாணவர்களை, சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை கல்வித்துறைக்கு உள்ளதல்லவா?
அப்படியானால், கல்வித்துறை மட்டும் களத்தில் இறங்கினால் போதுமா என்றால், நிச்சயமாக இல்லை; மாணவர்கள் திறம்பட, கல்வித்துறைக்கு பெரும்பங்கு இருந்தாலும், அதனுடன், அரசு, ஆசிரியர், பெற்றோர் இணைந்து, கைகோர்க்க வேண்டும். அப்போதுதான், மாணவன் ஜெயிக்க முடியும்.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்பது பழமொழி. எனவே, கற்பவரை நெறிப்படுத்தி, ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதோடு, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், மனதிடனையும் கொடுக்கக் கூடியதாக, கல்வி அமைய வேண்டும். மாரல் சயின்ஸ், வாழ்க்கைக் கல்வி என்றெல்லாம் சொல்லப்படும், நல்லொழுக்கக் கல்வி தொடர்பான வகுப்புகள், பள்ளிகளில் தவறாமல் இடம்பெற வேண்டும். அதற்கான முயற்சியில், கல்வித்துறையும், கல்வியாளர்களும், அரசும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர்களும், சேவை மனப்பான்மையுடன் பணிபுரிந்து, தன் குழந்தையைப் போல, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் இவற்றையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.பெற்றோரும், பிள்ளையை பள்ளியில் சேர்த்தாயிற்று, டியூஷனுக்கும் பணம் கட்டியாயிற்று; பின் என்ன... படித்துத் தொலைய வேண்டியது தானே அவர்கள் வேலை என்று, தனக்குரிய முழு பொறுப்பையும் தட்டிக் கழிக்காமல், குழந்தைகளுக்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில், பெற்றோர் காட்டும் அலட்சியம் கூட, குழந்தைகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும். எனவே, அவ்வப்போது அவர்களுடன் உரையாடி, தங்கள் அன்பை பகிர்ந்து, "உங்களுக்காகவே நாங்கள் சம்பாதிக்கிறோம்' என்ற உணர்வை, தத்தம் குழந்தைகள் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் எந்தப் பொருளை கேட்டாலும், உடனே வாங்கிக் கொடுக்காமல், சிறிது கால அவகாசத்தில் கொடுப்பதே நல்லது. அப்போது தான், வாழ்க்கையில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கும் என்ற எண்ணம், அவர்களுக்கு வராது. அதேபோல், வீட்டிலிருக்கும் கஷ்ட நஷ்டங்கள் குழந்தைகளுக்குத் தெரியாமல் வளர்ப்பதும் தவறு. கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தால் தான், குடும்பச் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ள மனம் பக்குவப்படும்.
இப்படி, இதுபோன்ற, இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே, இளைய சமுதாயத்தை, வருங்கால இந்தியாவை காப்பாற்ற முடியும்...                                                                         



 உங்கள் விக்னேஷ் ,,,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.