Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, February 1, 2012

முகவரியை தொலைக்கும் தமிழன் !!!!!!!
   பொதுவாகவே உறவினர்களின் வீடுகளுக்கோ நண்பர்களின் வீடுகளுக்கோ அடிக்கடி செல்வது என்பது எனக்கு ஏனோ பிடிப்பதில்லை சன்யாசம் பெறுவதற்கு முன்பாகவே இந்த பழக்கம் என்னிடம் இயல்பாக ஒட்டி இருந்தது அதற்கு காரணம் இல்லை என்று சொல்லிவிட முடியாது ஒரு வீட்டிற்கு நாம் போனவுடன் நம்மை கவனிப்பதற்காகவும் உபசரிப்பதற்காகவும் அவர்கள் எவ்வளவோ பிரயத்தனம் எடுத்து கொள்கிறார்கள் அதனால் அவர்கள் மன உளைச்சல் அடையவில்லை என்றாலும் நமக்கு அதை பார்த்தவுடன் நம்மால் தானே அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற எண்ணம் வந்துவிடுகிறது இதனால் அவர்களோடு இயல்பாக பழக முடியாமல் சில நேரங்களில் விருப்பம் இருந்தாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என்ற நடிக்க வேண்டிய சூழல் வருகிறது இதனாலேயே நான் அதை பெருமளவு தவிர்த்து விடுவேன் 

சன்யாசம் வாங்கிய பிறகு இந்த எண்ணம் அதிகமாகவே வந்து விட்டது என்பதை விட சன்யாசத்தை காரணம் காட்டி பல அழைப்புகளை தவிர்த்து விட கூடிய வாய்ப்பு கிடைத்து விட்டது ஆனாலும் எப்போதுமே யார்வீட்டிற்கும் போகாமல் இருக்க கூடிய வாய்ப்பு அமையும் என்று சொல்வதற்கு இல்லை தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும் போது போய்தான் ஆகவேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது அந்த வகையில் ஒரு நண்பரின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன் அவர்களுக்கு என்னை கண்டவுடன் ஆனந்தம் வராதவன் வந்திருக்கிறானே என்ற மகிழ்ச்சி அதனாலோ அல்லது அவர்களது இயல்பாலோ ஏராளமான தின்பண்டங்களை என் முன்னால் ஐயனார் சாமிக்கு படைப்பது போல் படைத்து விட்டார்கள் அவைகளை பார்த்தவுடன் எதையும் சாப்பிட முடியாத அளவிற்கு மலைத்து போனேன் என்பது ஒருபக்கம் இருந்தாலும் உண்மையில் அதிர்ந்து போனேன் என்பது தான் உண்மையாகும் 


அவர்கள் என் முன்னால் வைத்திருந்த தின்பண்டங்களின் பல என்னவென்றே எனக்கு தெரியாது விதவிதமான வடிவங்களில் வித்தியாசமான வண்ணங்களில் அவைகள் இருந்தன இந்த பலகாரங்கள் அனைத்துமே வீட்டில் செய்ததா என்று அவர்களிடம் கேட்டேன் எதோ ஒரு விசித்திரமான ஜீவனை பார்ப்பது போல் என்னை பார்த்த அந்த வீட்டு அம்மணி இவைகளை எப்படி வீட்டில் செய்ய முடியும் எல்லாமே கடைகளில் வாங்கியவைகள் என்று பதில் தந்தார்கள் கடையில் வாங்கியவைகள் என்றால் இந்த பலகாரங்கள் என்றோ செய்யபட்டிருக்க வேண்டும் நாளானாலும் கெட்டு போகாமல் இருக்க எதாவது ரசாயனங்கள் கலக்கபட்டிருக்க வேண்டும் இவைகளை சாப்பிட்டால் உடல்நலம் கெட்டுவிடாதா என்று அந்த அம்மணியிடம் கேட்டேன் 

நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறது காலையில் விழித்தது முதல் இரவு உறங்கும் நேரம் வரை ஓய்வு என்பதே கிடையாது ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது இதில் பலகாரங்களை வீட்டில் செய்ய நேரம் என்பதே கிடையாது அதற்கு ஒதுக்குகின்ற நேரத்தில் வேறு எதாவது உருப்படியான வேலையை செய்யலாம் பணம் கொஞ்சம் அதிகமாக செலவானாலும் கூட கடைகளில் வாங்கி கொள்வது தான் சிரமம் இல்லாத காரியம் இதில் உடல்நலம் ஆரோக்கியம் சுகாதாரம் என்று பார்த்தால் அவசரமான காலத்தில் வாழவே முடியாது என்று பதில் சொன்னார் அந்த பெண்மணி 


முன்பு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குளிர்ச்சியான நீராகாரம் பருகுவோம் வயிற்றில் உள்ள எரிச்சல் பித்தம் எல்லாம் கட்டுக்குள் இருக்கும் பழைய சாதம் வத்த குழம்பு மாங்காய் வடு தயிர் என கிராமிய காலை உணவுகள் வாயிற்ற மாட்டும் அல்ல நெஞ்சத்தையும் நிரப்பும் சூடான இட்லி சாம்பார் தேங்காய் பாலோடு ஆப்பம் இடியாப்பம் பொங்கல் என்று நீளுகின்ற காலை சிற்றுண்டிகளின் பெயர் பட்டியலே நாக்கில் நீர் ஊற செய்யும் 

ஆனால் இன்று நமது குழந்தைகள் இட்லி தோசையை கூட அருங்காட்சியங்களில் பாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் காய்ந்து போன பன்னை பிரட் என்ற பெயரில் காலை உணவாக உட்கொள்வதும் வாயிலேயே நுழையாத பெயர் கொண்ட நூடுல்ஸ்,பீசா என்று வேகாத செரிமானம் ஆகாத உணவுகளை எதோ தேவாமிர்தம் போல் சாப்பிடுகிறார்கள் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் செய்யப்படுகிற அதிரசம் முறுக்கு பணியாரம் சீடை போன்றவற்றின் பெயர்களை கூட நமது குழந்தைகள் மறந்து வருகிறார்கள் 


மணக்க மணக்க வெண்டக்காய் சாம்பார் வைத்து வாழைப்பூ பொரியல் செய்து கத்தரிக்காய் கூட்டு வைத்து சம்பா அரிசி சாதத்தில் மதிய உணவை வாழை இலையில் சாப்பிட்ட காலமெல்லாம் கனவாக போய்விட்டது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது பருத்தி கொட்டையை ஊற வைத்து ஆட்டுக்கல்லில் ஆட்டி பாலெடுத்து அதில் சாதம் சமைத்து கட்டியாக பருப்பில் பிசைந்து காரமான மிளகாய் துவையலை தொட்டுக்கொண்டு சாப்பிட என் பாட்டி தருவார்கள் அந்த சுவை இன்று ஐந்து நட்சத்திர உணவில் கூட இல்லை என்று சொல்வதை விட நட்சத்திர உணவுகள் அதன் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தான் சொல்ல வேண்டும் 

கம்பங்களி,கேழ்வரகு கூழ்,சோளச்சோறு என்பதெல்லாம் இன்று கிடைக்கவே கிடைக்காத உணவாக இருக்கிறது ஆனால் இத்தகைய பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்த காலம் வரை தமிழன் ஆரோக்கியமாக இருந்தான் இன்று நாகரிகம் என்ற போர்வையில் வேண்டாதவைகளை சாப்பிட்டு வரக்கூடாத வரவே முடியாத நோய்களை வரவழைத்து கொண்டு அவஸ்த்தை படுகிறான் கம்பளி சொக்காவும் காஸ்மீர் குல்லாவும் போட்டுக்கொண்டால் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதற்காக அதை உசிலம்பட்டி சந்தையில் வைகாசி மாத உச்சி வெயிலில் போட்டுக்கொண்டு ஒருவன் திரிந்தான் என்றால் அவன் பைத்தியகாரன் மட்டுமல்ல நாளடைவில் சரும நோய் வந்து சொரிந்தே செத்து போய்விடுவான் 


தண்ணீரில் தான் மீன் வாழ்கிறது என்பதற்காக ஆற்று மீனை பிடித்து கடல் நீரில் போட்டால் அதுவால் வாழமுடியாது அதே போலத்தான் இடத்து இடம் சூழலுக்கு சூழல் பருவநிலை மாறுபடுகிறது அந்த பருவ நிலைக்கு ஏற்றார்போல உடையும் இருக்க வேண்டும் உணவும் இருக்க வேண்டும் இன்றைய தமிழன் தான் முனுசாமி தேவரின் மகன் என்பதை மறந்து ராபட் கிளைவின் பேரன் என்று நினைத்து கொண்டு பன்னையும் பிரட்டையும் தின்று வையிற்றை கெடுத்து மருத்துவமனை கட்டிலில் இருபது வயதிலேயே வந்து விழுந்து விட்டான் புற்று நோய் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் மன நோய் என்பவைகள் முன்பு யாருக்கோ ஒருவருக்கு தான் அரிதாக வரும் இன்று இந்த நோய்களில் எதாவது ஒன்று வீட்டுக்கு ஒருவருக்கு இருக்கிறது இதற்கு காரணமென்ன அந்த நோய்களின் மூலம் என்ன என்பதை யோசிக்கவே மறந்து விடுகிறோம் 

என்று வயலில் போட்ட தழை உரம்,தொழுவுரம்,வேப்பம் புண்ணாக்கு என்பவைகள் மாறி யூரியா பொட்டாசியம் என்று வந்ததோ அன்றே நமது பூமி விஷத்தன்மையை பெற்று விட்டது விஷத்தில் பயிராகும் தானியங்கள் மனிதனுக்கு நோயை தராமல் ஆரோக்கியத்தையா தரும் பாதி கெட்டது போதாது என்று மீதியை கெடுத்து கொள்ளவும் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு விட்டோம் இதனால் அவதியும் படுகிறோம் ஆனால் அதிசயம் என்னவென்றால் நமது தொல்லைகளுக்கெல்லாம் காரணம் என்னவென்று அறியாமலேயே பல புதிய தொல்லைகளை பட்டு கம்பளம் விரித்து வரவேற்று கொண்டிருக்கிறோம் தமிழனை போல் முகவரியை தொலைத்து விட்ட இனம் எதுவுமே இல்லை என்று வருங்கால உலகம் கைகொட்டி சிரிக்கும் நிலையை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம்.

                                                                                             உங்கள் விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.