Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Sunday, February 5, 2012

குடிமகனால், அரசு பெறுவது வருமானம்; குடும்பம் இழப்பது தன்மானம்!


"தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா?" என்ற கேள்விக்குச் சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்:
"டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.

இந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.

சுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.

ஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.

மதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினாம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளது."

அமைச்சரின் பதிலின் சுருக்கம் "தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவர முடியாது!" என்பதே!

இதனை அவர் நேரடியாக மேற்கண்டவாறு ஒருவரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், அதற்காக அவர் அடுக்கிய காரணங்கள், நாட்டு மக்களின் நலனில் இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
டாஸ்மாக்கினால் 14000 கோடி வருமானம் வருகிறதாம். டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடுமாம். அதே சமயம், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயாராம்!

இவரின் இந்தப் பதிலுக்கு நாக்கைப் பிடுங்குவதுபோல் கேள்வி கேட்க ஒருவர் கூடவா சட்டமன்றத்தில் இல்லாமல் போய் விட்டார்?.

மதுவிலக்குக் கொண்டுவந்தால், அதனால் இப்போது கிடைக்கும் வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடும் என்றால், பின்னர் தமிழகத்தில் காவல்துறையும் ஒரு அரசும் எதற்காக இருக்கிறதாம்?.

ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மூடிவிடுவார்களாம். அப்போது மட்டும் சமூக விரோதிகளுக்கு அந்த வருமானம் சென்று சேர்ந்துவிடாதா?

இதைவிட மிகப் பெரிய காமடி, "மதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளதாம்".

பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் காந்தி பிறந்த தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களுக்காக முந்தைய தினம் மூன்று, நான்கு மடங்கு மது விற்பனையாவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு அந்த நாளில் விடுமுறை விட்டால் என்ன, விடாமல் இருந்தால் என்ன?!

ஆக மொத்தம் இந்த அரசு "குடி"மகனால் கிடைக்கும் வருமானத்தைக் கைவிடுவதற்கு  தயாரில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. நாட்டு மக்கள் எப்படிப்போனால் என்ன, எங்களுக்கு வருமானம்தான் முக்கியம் என்று கூறாமல் கூறும் ஒரு அரசு! மகா கேவலம்! நாட்டு வளத்தைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இதைவிட மேல் போல் தோன்றுகிறது!

அரசின் வருமானத்துக்காக டாஸ்மாக்கைத் தூக்கிப்பிடிக்கும் இந்த அரசு, அந்த டாஸ்மாக்கால் நாட்டில் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து, நடுத்தெருவில் நிற்கின்றன  என்பதை அறியுமா? வாழ வேண்டிய எத்தனை இளம் குருத்துகள், எதிர்காலம் இழந்து நிற்கின்றன என்பதை அறியுமா?

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்:

திண்டுக்கல் அருகே ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் சசிக்குமார். பெயின்டர் வேலை செய்து வரும் இவருக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் 4 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

சசிக்குமாருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே எழுந்த பிரச்சனையைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு முன்பே அவர் மனைவி சந்தோசம் வேறு ஒரு நபருடன் ஊரைவிட்டு ஓடி விட்டார்.

இதனால், தாயில்லாமல் இருந்த இவரின் இரு குழந்தைகளில் மகன் பாட்டி வீட்டிலும் மகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றிலும் தங்கிக் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் மட்டும் தந்தையோடு வந்து தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்.

எப்போதும் போல், கடந்த மே மாதம் இறுதியாண்டு தேர்வு எழுதிய மகள் தந்தையுடன் வந்து தங்கியுள்ளார். அப்போது, குடிபோதை வெறியில் சசிக்குமார் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். தந்தையின் குடிவெறியினைக் குறித்து அறிந்திருந்த மகள், பயத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறாமல், பள்ளி திறந்தவுடன் விடுதிக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறையில் சசிக்குமாரின் மகள் பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.

அவரின் வயிறு சாதாரண நிலையினைவிட பெரிதாக இருப்பதைப் பார்த்துச் சந்தேகத்தில் மருத்துவமனை கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளார்  பாட்டி. அப்போது அவர் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த பாட்டி, பேத்தியிடம் விசாரித்த போது, கடந்த மே மாத விடுமுறையில் தந்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, குடிபோதையில் தந்தை தன்னை வன்புணர்ந்த விவரத்தைக் கண்ணீர் மல்க பாட்டியிடம் கூறினார். எதுவும் செய்ய இயலாத நிலையில், இதுகுறித்து காவல்துறையில் பாட்டி புகாரளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சசிக்குமாரைக் கைது செய்தனர்.

ஆனால், இதனால் இப்போது என்ன பிரயோஜனம்? வாழவேண்டிய பெண், பெற்ற தந்தையாலேயே சீரழிக்கப்பட்டு, வயிற்றில் குழந்தையுடன் எதிர்காலமே சூனியமாகி நிற்பதற்குக் காரணம் என்ன?

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால், அவரைப் பேணிப் பாதுகாக்க தாய் கண்டிப்பாக வேண்டும். இங்குத் தாய் வீட்டில் இல்லாததே முதல் பிரச்சனையானது. அந்தத் தாயும் தன் பிள்ளைகள் இருவரையும் மறந்து, தன் வாழ்வை மட்டும் நினைத்துப் பிறிதொருவருடன் ஊரை விட்டு ஓடிப்போய்விட்டார். அதற்கும் குடும்பத்தலைவனின் குடியே காரணமாக இருந்தது.

மனைவி தன்னை விட்டுப் போனதற்குக் காரணம், பாழாய்ப்போன குடிதான் என்பது தலைக்கு ஏறாத அந்த மனிதன், மனைவி போனாலும் பரவாயில்லை; குடி போதும் என்று இருந்தது, பெற்ற மகளின் வாழ்க்கையையே சீரழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியதோடு, தானும் சிறைக்குச் செல்லக் காரணமாகிப் போனது!

இத்தனைக்கும் காரணம் வாழ்வைச் சீரழிக்கும் இந்தக் குடிதான் என்பதை இப்போதாவது அந்தக் குடும்பத் தலைவன் உணர்வானா என்பது தெரியவில்லை!

இது போல் எத்தனை எத்தனை குடும்பங்கள்? எத்தனை விதமான சீரழிவுகள்?

இவை அத்தனைக்கும் காரணம் இந்த மதுபானம்! ஆனால், நம் அமைச்சருக்கு இவையெல்லாம் ஒரு விஷயமேயில்லை. மதுவிலக்கைக் கொண்டுவருவதால், அந்த வருமானம் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும் என்ற கவலைதான் பெரிதாக உள்ளது!

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, "மக்களின் நலனே முக்கியம்; அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதே என் லட்சியம்" என்று அறிவித்தார்.

அவரின் அறிவிப்பு மனப்பூர்வமானது எனில், முதலில் அவர் செய்யவேண்டியது - தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்துவதே!

குடும்பங்களைச் சீரழித்து, வாழவேண்டிய இதுபோன்ற எத்தனையோ இளம் மொட்டுகளின் வாழ்வை இல்லாமலாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கேடுகெட்ட குடியினால் வரும் வருமானம் தமிழகத்துக்குத் தேவையா என்பதை முதல்வர் ஜெயலலிதா சிறிதாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!

இளம் மொட்டுக்களின் வாழ்க்கையை நாசமாக்கிக் கிடைக்கும் வருமானத்தோடு, எத்தனையோ குடும்பங்களின் சாபங்களும் சேர்ந்தே தமிழக அரசுக்குக் கிடைக்கிறது என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர்ந்து, உடனடியாக தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்துவார் என்று எதிர்பாப்போம்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.