Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, January 27, 2012

தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணத்தை அலசும் நேரமிது..........?


ஒருவர் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்கும் தந்திரம் ஒட்டுமொத்த இனத்தையே அழித்துவிடும். பாரம்பரியமிகு தமிழினத்திற்கு இக்கேடு நிகழ்ந்துவிடக்கூடாதென்கிற நோக்கில் சமீபத்தில் ஒரு கட்டுரையை தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்தார். அக்கட்டுரையின் தலைப்பு என்னவென்றால், “தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்?” இக்கட்டுரையை ஒவ்வொரு தமிழனும் வாசித்து சிந்தித்து செயற்படுவது இக்காலத்தின் இன்றியமையாத கடமையாகும்.

நெடுமாறன் அவர்களின் கட்டுரையை சற்று அலசுவதற்காகவே இக்கட்டுரை எழுதுவதற்கான காரணம். பழ நெடுமாறன் அவர்கள் தனது கட்டுரையில் வட இந்திய ஆதிக்க சக்திகளையும், தற்காலத்து தமிழக அரசியல்வாதிகளையும் விமர்சித்து எழுதியுள்ளார். ஒவ்வொரு செய்கைக்கும் எதிர்வினை உண்டு. ஒருவரின் ஆக்கத்தை விமர்சிப்பதன் மூலமாக நல்லதொரு சமூகத்தை உருவாக்கலாம்.
தனது கட்டுரையில் நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ளதாவது:
“இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.”
நாம் சோம்பேறிகளாக இருக்கும்போது மற்றவன் எம்மை சீண்டிப் பார்த்துக்கொண்டேதான் இருப்பான். அந்த வகையில், தமிழ் அரசியல்வாதிகளே தமது சுகபோக வாழ்விற்காக தமது குரல்களை எழுப்பாமல் இருக்கும்போது எப்படி நாம் இந்திய மத்திய அரசையோ அல்லது அகில இந்திய அரசியல் கட்சிகளையோ ஆதரவளிக்கும்படி கேட்க முடியும்?”
வெறும் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் மாதிரி தமிழ் மக்கள் இருந்தால் எப்படி நீதியைப் பெற முடியும். நீதியைப் பெற வேண்டுமாயின் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டால் அனைத்து அரசியல்வாதிகளும் எமக்குப் பின் வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு வேண்டியதெல்லாம் மக்களின் வாக்கே. மக்கள் தெளிவாக ஓரணியில் திரண்டால் அரசியல்வாதிகள் எமக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்கள் சார்பு தன்னலமற்ற அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்களின் உயர்வில் அக்கறை கொண்ட அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து மக்களை ஓரணியில் திரட்டி போராடினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
மற்றவர்களை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினம்
சீனத்து மக்கள் தமக்குள் அதீத ஒன்றுமையைக் கடைப்பிடிப்பவர்கள். தமது இனத்தவர் ஒருவருக்கு தீங்கு விளைந்தால் ஒட்டுமொத்த சீனத்தவர்களும் ஓரணியில் திரண்டு விடுவார்கள். தமிழர்கள் அப்படியல்ல. இன்னொரு தமிழன் அடிவாங்கும் போது மற்றவர்களுடன் இணைந்து தானும் அடித்தே பழக்கப்பட்டுவிட்டான் தமிழன் என்பதே உண்மை. தமிழீழ விடுதலைப் போர் ஆரம்பித்த பின்னர்தான் ஓரளவிற்கு தமிழர்களுக்குள் ஒன்றுமை வந்தது. இவ் ஒற்றுமை என்பது பரிதாபத்தினால் வந்ததே. பரிதாபத்தினால் வந்த ஒற்றுமை காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்.
தமிழகத் தமிழர்கள் சினிமா மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை. குடிசையில் வாழ்ந்தாலும், ஒரு வேளைக்கு சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வெள்ளித்திரை நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆனந்தம் அடையும் நிலையே தமிழகத்தில் பட்டிதொட்டி அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கிறது.
ஏழு கோடித் தமிழர்களில் எத்தனை பேர் செய்திகளைப் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி எழும்போது, விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே செய்திகளை பார்க்கிறார்கள் என்கிற பதில் வருகிறது. செய்தி நேரம் வந்துவிட்டால் தமக்கு இடைவேளை வந்துவிட்டதாக எண்ணி தமது அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள் பலர். இதற்கு ஒரு முடிவுகட்ட தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்ட தலைவர்கள் யாராவது முன்வருகிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வருகிறது.
மக்களை வழிநடத்த வேண்டிய அரசியல்வாதிகளே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துவதென்பது வெட்கக்கேடான இன்னொரு விடயம். கேட்டால் தமது கட்சிக் கொள்கையை மக்கள் அறியும் வண்ணம் செய்யவே தொலைக்காட்சிகளை ஆரம்பிப்பதாக கூறுகிறார்கள் குறித்த அரசியல்வாதிகள். குறித்த தொலைக்காட்சிகளில் தமிழரின் கலாச்சாரத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளை பல மணித்தியாலங்களாக ஒளிபரப்படுகிறது. இதனை யாராலும் மறுக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் வருகிறது.
பழ நெடுமாறன் தனது கட்டுரையில் எழுதியுள்ளதாவது, “தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள், துணி, சிமெண்ட், மின்சாரம் போன்ற பலவற்றை எவ்விதமான தங்குதடையுமில்லாமல் பெற்றுக்கொள்கின்றன. இயற்கையிலேயே தண்ணீர்ப் பற்றாக்குறையான தமிழகத்துக்குத் தங்களிடம் மிகையாக உள்ள தண்ணீரைக்கூடத் தர அவர்களுக்கு மனமில்லை. பிடிவாதமாக மறுக்கின்றன.”

நெடுமாறன் அவர்களுக்குத் தெரியாத பல விடயங்கள் இருக்க முடியாது. இந்திய அரசியலில் விதை விதைத்து பழம் சாப்பிட்டவர்தான் அவர். ஆகையினால், இவருடைய ஆதங்கங்களுக்கு காரணம் உண்டு. யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் பல தமிழக தொழில் நிறுவனங்கள் இருக்கிறதென்று நெடுமாறன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழக மக்கள் இன்றும் தமது மாநிலத்திலேயே அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள் என்பதனை யாராலும் மறுக்க முடியுமா?
யூதர்களின் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் பல நிறுவனங்கள் மேற்கத்தைய நாடுகளில் இருக்கின்றன. அதன் காரணத்தினால் பல உலக நாடுகள் யூதர்களைப் பகைக்க விரும்பவில்லை. சிறிய நாடான இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக பல காலங்களாக போரைச் செய்து வருகிறது. பாலஸ்தீனர்களின் தாயகப் பூமியை அபகரிக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் அறிந்தும் யூதர்களைப் பகைக்கக்கூடாது என்கிற காரணத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அதைப்போலத்தான் யாரின் கையில் அதிகாரங்கள் இருக்கிறதோ அவர்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் கண்டும் காணாமல் இருந்தால்த்தான் தமிழகத் தமிழர்கள் வாழலாமென்கிற நிலையே இன்று தமிழகத்தில் நிலவுகிறது.
தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள், துணி, சிமெண்ட், மின்சாரம் போன்ற பலவற்றை எவ்விதமான தங்குதடையுமில்லாமல் அண்டை மாநிலங்களுக்கு செல்வதை தமிழக மக்கள் தடுக்க முடியாது. ஆதிக்கத்தை தம் கையில் வைத்துள்ளவர்கள் இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரைக் கூட தடை செய்யலாம்.
அண்டை மாநில மக்களே முன் நின்று தடுக்கும் நிலை வந்ததற்கு காரணம் குறித்த மாநிலங்களில் இயங்கும் வல்லாதிக்கம் படைத்த நபர்களே. தமிழகம் சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் மத்திய அரசிற்கு இல்லை. கேரளம் என்ன சொல்கிறதோ அதனை உடனேயே அமுல்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. மலையாளிகளின் ஆதிக்கம் இந்திய நடுவன் அரசில் மித மிஞ்சிப்போய் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? சீக்கியர் சொல்வதை மத்திய அரசு கேட்டே ஆக வேண்டிய சூழ்நிலை. சீக்கியர் இல்லையென்றால் இந்திய இராணுவம் பலமற்றதாகப் போய்விடும்.
வந்தோரை வாழ வைப்பதே தமிழ் நாடென்று பழமொழிகளைக் கூறிக்கொண்டு சோம்பேறிகளாக வாழ்பவர்களே தமிழர்கள் என்றால் மிகையாகாது. மக்களை வழி நடத்த முற்போக்கு சிந்தனையாளர்கள் முன்வர வேண்டும். மக்களுக்கு தகுந்த படிப்பினைகளைக் கொடுத்து அவர்களைச் சிறந்த பிரஜைகளாக ஆக்க வேண்டிய பொறுப்பு முற்போக்குவாதிகளுக்கு உண்டு.
நெடுமாறன் போன்றவர்களின் தலைமையில் இளைஞர் மற்றும் யுவதிகள் பட்டாளம் ஒன்றிணைய வேண்டும். திருவள்ளுவர் போன்ற மகான்களைப் போற்றுவதற்குப் பதில் ஷேக்ஸ்பியர் போன்றவர்களை புகழ்பாடுவதுதான் தமிழர்களின் வழக்கம். இதன் மூலமாக தமிழையும் தமிழர்களையும் நாமே ஓரம் கட்டுகிறோம் என்றே பொருள். அனைத்தையும் அறிவதில் எந்தவிதமான பிழையும் இல்லை. எம்மை நாம் தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை உயர்த்திக் காட்டுவதுதான் நமது பண்பாடாக இருக்கிறது.
தமிழர்களின் பங்கு அளப்பரியதே
இந்திய விடுதலைப் போரில் தமிழகம் செலுத்தியிருக்கிற பங்கு அளப்பரியதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார் நெடுமாறன். அவர் மேலும் கூறுகையில், “தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.
“தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற பல தலைவர்களும் எண்ணற்ற தொண்டர்களும் காந்தியடிகளை உளமாறப் பின்பற்றி எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். அண்ணலின் அழைப்பையேற்று அறப்போரில் தடியடிக்கு ஆளாகி உயிர்நீத்தான் திருப்பூர் குமரன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் முதலாவது இந்திய சுதந்திர அரசை நிறுவி, இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது அவருக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.”
நெடுமாறன் அவர்களின் கூற்றுக்கள் அனைத்துமே உண்மையே. இருப்பினும்இ தமிழர்கள் அன்றும் காந்தி போன்றவர்களுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்பதே உண்மை. நேரு இரண்டாம் நிலையில் இருந்து போராடினார். காந்திக்கு பல வழிகளில் உதவிய தமிழர்களை நேரு இருந்த இடத்திற்கு அண்மையில் கூட வைத்திருக்கவில்லை காந்தி. வெறும் போராட்ட சக்திகளாகவே தமிழர்களைப் பாவித்தார்களே தவிர தமிழர்களை உயர் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக வைத்திருக்கவில்லை.
நெடுமாறன் மேலும் எழுதியுள்ளதாவது, “முதலாவது சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டபோது நிதியமைச்சர் பொறுப்பைத் தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் பிரதமர் நேரு ஒப்படைத்ததைத் தொடர்ந்து, முதலாவது கவர்னர் ஜெனரலாக ராஜாஜி, மத்திய அமைச்சர்களாக டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஓ.வி. அளகேசன், ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம் போன்ற பலர் பெரும் பொறுப்புகள் வகித்துச் சிறப்பாகத் தொண்டாற்றி தமிழகத்துக்குப் பெருமை ஈட்டிக்கொடுத்தார்கள்.
“அவர்களுடன் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒருபோதும் தமிழுக்கோ, தமிழினத்துக்கோ, தமிழகத்துக்கோ சிறுமை தேடித் தரவில்லை. அகில இந்திய கட்சிகளின் தலைவர்களாகவும் பல தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். காங்கிரஸ் தலைவராகக் காமராஜ், முஸ்லிம் லீக் தலைவராக “காயிதே மில்லத்’ முகமது இஸ்மாயில், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத்தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் போன்ற பலர் பொறுப்பு வகித்து அந்த பதவிகளுக்குப் பெருமை தேடித் தந்தார்கள்.”
நெடுமாறன் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே. எதற்காக தமிழர்களுக்கு நேரு அவர்கள் முக்கியத்துவதத்தை தனது அரசாங்கத்தில் அளித்தார் என்பதை ஆராய வேண்டும். சீக்கியர் மற்றும் மலையாளிகளின் அதிகாரங்கள் இன்று எந்தவகையில் அகில இந்திய அளவில் இருக்கிறதோ, அதைப்போலத்தான் அன்று தமிழர்களின் பலம் இருந்தது. தமிழர்கள் பல நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செல்வாக்கு இந்திய நாட்டிற்கு அன்று தேவைப்பட்டது.
நேரு அவர்கள் பரந்த சிந்தனையுடனேயே அவ்வாறான நிலையை அன்று எடுத்தார். இந்து சமுத்திரத்தின் குரல்வளையாக இருப்பது தமிழகம். பூகோள அரசியல் மற்றும் இராணுவ நலன்களுக்கு ஏற்ற இடமாகவே தமிழகம் இன்றும் இருக்கிறது. இந்திய இராணுவப் பலத்தை அதிகரிப்பது என்பது இன்றியமையாத தேவையாக அன்று இந்திய நடுவன் அரசிற்கு இருந்தது.
ஒட்டுமொத்த இந்து சமுத்திரத்தையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பது நேருவின் கனவு. இதனை நிறைவேற்ற தமிழகத்தின் ஆதரவு தேவை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிஜி, மொரிசியஸ், பர்மா, தென் ஆபிரிக்காஇ,அந்தமான்,நிகோபார் போன்ற இடங்களில் தமிழர்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. அவர்களின் கடினமான உழைப்பினால், குறித்த நாடுகள் பொருளாதார ரீதியில் பல அனுகூலங்களை அனுபவித்தார்கள். இவ் மக்களின் செல்வாக்கை வைத்தே இந்தியாவின் உலக நாடுகளுடனான இராஜதந்திர நல்லுறவை மேம்படுத்தலாம் என்பதை அன்று நன்கே உணர்ந்தார் நேரு.
காலம் இன்று மாறிவிட்டது. உலகின் முக்கிய சக்தியாக இன்று இந்தியா வளந்துள்ளது. தமிழர்களின் தயவின்றி தனது செல்வாக்கை உலக அளவில் இன்று இந்தியா வைத்துள்ளது. தமிழர்களின் கடின உழைப்பு இன்று இந்திய அரசிற்கு தேவையில்லை. அன்று மக்கள் செய்த வேலைகளை இன்று இயந்திரங்கள் செய்கின்றன.
தமிழர்கள் இன்று வேண்டப்படாத இனத்தவராகவே இந்திய நடுவன் அரசினால் பார்க்கப்படுகிறார்கள். இவர்களின் வாக்குகள் கூட இந்திய தேசியக் கட்சிகளுக்கு இல்லையென்கிற நிலையே தமிழகத்தில் நிலவுகிறது. ஆக தமிழர்களை முன்னர் நன்றாகவே கசக்கி பிழிந்து அனைத்து சக்திகளையும் எடுத்துவிட்டு அவர்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் பிற இனத்தவர்கள் என்பதே உண்மை. தமது இனத்தின் மீது பற்று அற்றவர்களாகவேதான் இன்றும் பல கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள் பல. இந்திய அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறிவிட்டு நாம் தப்பிக்க முடியாது. நமக்கு புண் வந்துவிட்டால் நாமேதான் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். நாம் வீட்டிற்குள் சோம்பேறிகளாக தூங்கிக் கொண்டிருந்துவிட்டு மருத்துவர் நமது வீடு வந்து புண்ணுக்கு மருந்து கொடுப்பாரென யதார்த்தத்திற்கு ஒத்துவராத கனவைக் காண்பது முட்டாள்தனம். நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும். மற்றவர்கள் அதனை நமக்கு கொண்டுவந்து தரமாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.