ஊடகங்களின் தலையாய கடமை என்பது நடு நிலமையான செய்திகளைப் பகிர்வதோடு சமூக மேம்பாட்டிற்காப் பாடுபடுவதாகும். இன்றளவில் தமிழ் ஊடகங்களில் அதிகளவானவை நடு நிலமை என்ற பதத்தின் கீழ் இயங்குவதில்லை எனலாம். ஓசியில கூகிள்காரன் ப்ரீயா வுடுற வலைப் பூவில் கூட நாமெல்லாம் பிரபலமாகனும், எம் பதிவுகளைச் சந்தைப்படுத்தி ஹிட் அடித்து அண்ணா நகரில அப்பார்ட்மெண்ட் வாங்கனும் என்று அலையும் போது வியாபார நோக்கத்தில் செயற்படுகிற, ஊடகங்கள் என்ன சும்மாவா இருப்பாங்க?தமிழ் ஊடகங்களாயினும் சரி,பிற மொழி ஊடகங்களாயினும் சரி விளம்பரங்களை அடிப்படையாக வைத்துத் தான் தமது ஊடகப் பணியினைச் செய்து வருகின்றன. இந் நிலமையில் நாம் ஊடகங்களிடம் நடு நிலமை என்பதனை எதிர்பார்ப்பது தவறு அல்லவா?
தமிழ் ஊடகங்கள் இணையத்தில் பல்கிப் பெருகியுள்ள நிலையில் தரமான செய்திகளும், ஸ்திரத் தன்மை கொண்ட செய்திகளும் நம்பகத் தன்மையுடன் வருவது குறைவு. தற் கால அரசியல் நிலைப்பாடுகளை அடிப்படையாக வைத்து அதிகளவான ஊடகங்கள் தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம் எனும் நோக்கில் தான் செயற்படுகின்றன. இதற்கான பிரதான காரணங்கள் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான நேரடித் தொடர்புகள் இருந்தாலும், செய்தியின் உறுதிப்படுத்தல் என்பது மந்த கதியில் இருக்கின்றமையே ஆகும். தமிழக மக்களை நோக்கி ஈழம் சார் அரசியல் நிலவரங்களை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் எல்லாம் தம் விளம்பர நோக்கத்திற்கு முதன்மை கொடுத்து மக்களின் பிரச்சினை பற்றிய கவலை, கரிசனை ஏதுமின்றித் தான் இயங்குகின்றன. 
தமிழக மக்களின் ரசனை, ஈழத் தமிழர்கள் மீதான கரிச்னை ஆகியவற்றினை நாடி பிடித்துப் பார்த்து இயங்கும் ஈழ ஆதரவு ஊடகங்கள் எந்தக் கருத்தினையும் தாம் பிரசுரித்தால் தமிழக மக்கள் இலகுவில் நம்பி விடுவார்கள் எனும் மாயையினை இன்றளவில் உருவாக்கி வைத்திருக்கின்றன.ஈழம் சார்பான செய்திகளைப் பிரசுரித்து தாமும் ஈழத்திற்கு முற்று முழுதாக ஆதரவானவர்கள் எனும் வகையில் தான் அதிகளவான ஊடகங்கள் நம்பகத் தன்மையற்ற செய்திகள் ஊடாகத் தம் ஈனப் பணியினை இன்றளவில் ஆற்றுகின்றன. ஒரு வீடு தீப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சம நேரத்தில் தீப்பிடித்து எரியும் வீட்டிற்கு அருகேயுள்ள வீட்டில் சிறியளவிலான சேதம் ஏற்படுகின்றது. முதலில் தீப் பிடித்த வீட்டினை அணைக்க வீட்டு ஓனர் ஓடுவானா? இல்லே பக்கத்து வீட்டுக்காரன் மீதான தன் கரிசனையை வெளிப்படுத்த வீட்டு ஓனர் ஓடுவாரா? 
முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்சினை. தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினை தான் இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை. ஸோ...இந்தப் பிரச்சினைக்குத் தானே தமிழகச் சொந்தங்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பாங்க. இந் நிலையில் வியாபார நோக்கில் செயற்படும் சில ஊடகங்கள் தமிழக மக்களின் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவு குறைந்து விட்டது என்றும் தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்றும் கோரி செய்திகளை வெளியிடுகின்றன. இப்போதைய நிலமையில் தமது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டுத் தானே தமிழக மக்கள் ஈழத் தமிழர்கள் பற்றிய விடயங்களில் கவனம் செலுத்த முடியும்? இதனைச் சிறு பிள்ளை கூட இலகுவில் புரிந்து கொள்ளும். ஆனால் எம் ஊடகங்கள் எழுதும் செய்திகள் இருக்கின்றனவே! தமிழகத்தில் எழுச்சி குறைந்து விட்டதாம். தமிழக மக்கள் உணர்ச்சியற்றுப் போய் விட்டனராம் எனக் கூறி தமிழக மக்கள் பிரச்சினை பற்றி ஏதும் பேசாது சந்தடி சாக்கில் ஈழப் பிரச்சினை பற்றி பேச நினைக்கின்றன. 
இலங்கை தொடர்பான செய்திகளைத் தமிழகத்தில் வெளியிடும் ஊடகங்களிற்கு இலங்கையில் நம்பகத் தன்மை வாய்ந்த செய்தியாளர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை. சன் டீவி போன்ற பெரிய ஊடகங்கள் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகைச் செய்தியாளர்களைச் செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்தாலும், ஈழத்து அரசியல் நிலமைக்கு அமைவாக தமது உயிரைப் பாதுகாத்துக் கொண்டு தான் ஊடகவியலாளர்கள் செய்திகளை வழங்குவார்கள். இப்படியான இக் கட்டான சூழ் நிலையில் ஈழ மக்கள் பற்றிய சரியான புரிதலற்று தமது வியாபார உத்தியினை வலுப்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிட்டு தமிழக மக்களையும் ஏமாளிகளாக்கி, அச் செய்திகளைப் படிப்போரையும் ஏமாளிகளாக்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் அல்லவா? 
ஈழ ஊடகங்களும்,பதிவர்களும் கருணா குழுவிற்கு விலை போய் விட்டார்கள்! 
அண்மையில் ஒரு சில இணையத் தளங்கள் கிளப்பியிருக்கும் புதுப் புரளி தான் இது. ஈழ ஊடகங்களும், ஈழப் பதிவர்களும் கருணா குழுவிற்கு விலை போய் விட்டார்கள் என்பதாகும். ஈழத்தில் கருணாவும், டக்ளசும் இப்போது காற்றுப் போன சைக்கிள் டயர் போன்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்களே தமக்கு கீழ் உள்ள உறுப்பினர்களை மேய்ப்பதற்கு பணமில்லாது மகிந்த அரசின் காலடியின் கீழ் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் நல்லாத் தான் வைக்கிறாங்கய்யா வேட்டு! தமிழக மக்களின் எழுச்சியினைச் சீர் குலைக்கும் நோக்கில் ஈழ ஊடகங்கள் கருணா குழுவால் வாங்கப்பட்டு வழி நடத்தப்படுகின்றனவாம். அப்படீன்னா அப்படி விலை போன ஊடகங்களை ஆதாரங்களுடன் எழுத வேண்டியது தானே? 
இப்போதைய நிலவரப்படி கருணாவும், டக்ளசும் ஈழத்தில் என்ன அம்புட்டுப் பெரியாட்களா? பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகளாக இருக்கிறார்கள். அவர்களை வைத்து தம் வியாபாரத்தினை வளர்க்க நினைக்கும் ஊடகங்களை நினைத்தாலும் சிரிப்புச் சிரிப்பா வருகிறது. மக்களை ஏமாளிகள் என நினைத்து செய்தி வழங்குவதனை விடுத்து மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடிக்கும் நோக்கில் நம்பகத் தன்மையுடைய செய்திகளை வழங்குவது ஊடகங்களின் கடமையல்லவா? இதனைச் சரியான வழியில் தமிழ் ஊடகங்கள் செய்ய வேண்டும் என்பதே ஈழ மக்கள் அனைவரினதும் அவா. இந்த ஆவலையும், ஈழ மக்களின் எண்ணங்களையும், ஈழ மக்கள் மனங்களையும் புரிந்து கொண்டு தரமான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டால் மக்கள் மனங்களும் மகிழ்ச்சியடையும். மக்களுக்கான பணிகளும் இலகுவில் கிடைக்கும் அல்லவா?
************************************************************************************************************
தமிழ் வலைப் பதிவர்களினதும், வலைப் பதிவுகளினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றது. இது ஆரோக்கியமான இணைய வாசிப்பினை மேம்படுத்தும் ஓர் நல்ல விடயமாக அமைந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை. அண்மையில் "மெய்ப்பொருள்" எனும் வலைப் பூவோடு "சீனிவாசன்" அவர்களும் பதிவுலகில் நுழைந்திருக்கிறார். சமூகத்திற்குப் பயன்மிக்க பதிவுகளைத் தன் வலைப் பதிவில் எழுதி வருகின்றார். சீனிவாசனின் மெய்ப்பொருள் தளத்திற்கு நீங்களும் ஒரு தடவை சென்று பாருங்களேன்!
உங்கள் விக்னேஷ் 
சென்னை
 


 
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.